சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிறுமிகளுக்கு கல்வி மற்றும் பொருளாதார உதவி வழங்கும் பெயரில் அவர்களை அணுகி, பின்னர் பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக போயஸ் கார்டனில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களா வீடும் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஜெம் வீரமணியிடம் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு குழு நடத்திய மறுவிசாரணையில், சம்பவம் நடந்தபோது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 84 வயது வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
வீரமணி தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழில் கூட்டாளிகளுக்கு மதுபான விருந்து ஏற்பாடு செய்து, அதில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை ஈடுபடுத்தியதாகவும் விசாரணையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா வீடு எடுத்து பயன்படுத்தியதாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீரமணியின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரசிம்மன் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அணுகியதாக வழக்கில் குற்றச்சாட்டு உள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஆசிரமங்களையும் நடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஆசிரமங்களில் இருந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களில் சிலரை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆடைகள், செல்போன்கள் மற்றும் பண உதவி வழங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி படிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அவர்களை நம்பவைத்து, பின்னர் போயஸ் கார்டனில் உள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாக வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு மதுபானம் வழங்கி வீரமணியுடன் பாலியல் தொடர்புக்கு கட்டாயப்படுத்தியதாகவும் போலீஸ் விசாரணையில் குற்றச்சாட்டு உள்ளது. இதே முறையில் பல ஆண்டுகளாக சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம் பெண்கள் அழைத்து வரப்பட்டதாகவும், வீரமணியின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளுக்கும் அவர்களை அழைத்து விருந்து ஏற்பாடு செய்ததாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை கிடைத்த கணக்குகளின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடர்புபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: ஆசிய விளையாட்டு!. இந்தியாவுக்கு முதல் பதக்கம்!. துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!



