ஈரான்-அமெரிக்க மோதல் நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு கதவை திறந்து வைத்திருக்கும் அதே நேரத்தில், அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக கத்தார் மூலம் 7 நிபந்தனைகளை வாஷிங்டனுக்கு ஈரான் அனுப்பியுள்ளது. அதேசமயம், தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் தீர்க்கமான போருக்கு தயாராக இருப்பதாகவும் ஈரான் தரப்பு எச்சரித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, கத்தார் மூலம் தங்களது நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
போரை அனைத்து முனைகளிலும் முடிவுக்கு கொண்டு வருவது, முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிப்பது, கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்டவை ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் அடங்கும். அமெரிக்காவின் மிரட்டல்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றாது என்றும் ரெசாயி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பேச்சுவார்த்தைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியான நிலையில், ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. பிராந்திய நாடுகளும் நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறையும் ஈரான் தனது ராணுவ திட்டமிடலில் கருத்தில் கொண்டுள்ளதாக ரெசாயி தெரிவித்துள்ளார். முந்தைய இரண்டு கட்ட மோதல்களுக்குப் பிறகு ராணுவத் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாரசீக வளைகுடா முதல் ஓமன் வளைகுடா வழியாக அரபிக்கடல் வரை செயல்படும் அமெரிக்க கடற்படை தளங்கள் மற்றும் கப்பல்களை மையமாக வைத்து புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கப்பல் அல்லது விமானம் தாங்கிக் கப்பல் அருகே சமீபத்தில் பல போர்க்கப்பல்களை தாக்கும் திறன் கொண்ட பல்முனை ஏவுகணை ஒன்றை ஈரான் சோதனை செய்ததாகவும் ரெசாயி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கான ஈரானின் பதில் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மட்டுமின்றி, அங்கு செயல்படும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
நடைமுறையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றாலும், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈரான் கவனம் செலுத்தி வருவதாக ரெசாயி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி விவகாரமும் இந்த மோதலில் முக்கிய பிரச்சினையாக நீடிக்கிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தமான NPT-யில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரெசாயி தெரிவித்துள்ளார். அதேவேளையில், அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஈரானை அந்த முடிவை நோக்கி தள்ளக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மத அடிப்படையிலான உத்தரவின்படி அணு ஆயுதங்கள் தடை செய்யப்பட்டவை என்ற நிலைப்பாட்டை அந்நாடு தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செங்கடலையும் அரபிக்கடலையும் இணைக்கும் பாப் அல்-மண்டெப் நீரிணையை ஈரான் மூடக்கூடும் என்ற தகவல்களையும் ரெசாயி நிராகரித்துள்ளார். அந்த நீர்வழிப் பகுதியின் கட்டுப்பாடு ஏமன் மற்றும் ஹவுதி இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால், அதை மூடும் விவகாரத்தில் ஈரானுக்கு நேரடி கட்டுப்பாடு இல்லை என்பதே அவரது விளக்கமாக உள்ளது.
அதேநேரத்தில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் இடையே ஒப்பந்தம் ஏற்படும் நிலை இருந்ததாகவும் ரெசாயி தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு இன்னும் தயாராக இருப்பதாகவும், அதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்பு பிராந்திய நாடுகளின் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை உயர்மட்ட கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லும் ஈரான் பிரதிநிதிகள் குழுவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விசா வழங்கியுள்ளது என அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ள நிலையில், மறுபுறம் சாத்தியமான அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத் தயார்நிலையையும் அந்நாடு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. முடக்கப்பட்ட நிதி, கடல் வழிப் பாதுகாப்பு, பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ நிலைநிறுத்தம், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் என பல்வேறு விவகாரங்கள் இந்த மோதலுடன் இணைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் இவை அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Also Read: ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!



