லஞ்சம் என்றாலே கையில் பணம் கொடுத்து வாங்கும் காலம் மாறிவிட்டதா? அரசு அலுவலகங்களில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. தமிழகத்தின் 43 நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரொக்கத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பொதுமக்களுக்கு நேரடியாக தொடர்புடைய ஏராளமான பணிகள் நடைபெறுகின்றன. குடிநீர் இணைப்பு, நிர்வாக அனுமதிகள், உள்ளாட்சி சார்ந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் இந்த அலுவலகங்களை அணுகுகின்றனர். இந்தப் பணிகளுக்காக முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி உத்தரவின் பேரில் அதிரடி சோதனைக்கு அதிகாரிகள் தயாரானார்கள். மாவட்ட வாரியாக நடவடிக்கை திட்டமிடப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குள் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கப்பட்டது.
டிஎஸ்பிக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 350-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் களமிறங்கினர். சோதனை நடைபெற்றபோது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியே செல்ல முடியாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. வெளியிலிருந்தவர்களும் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், பணம் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 207 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்தச் சோதனையில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது ரொக்கப் பணம் மட்டுமல்ல. ஜி-பே மூலம் நடைபெற்ற ரூ.1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 459 மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. இந்தப் பணப் பரிமாற்றங்களின் நோக்கம் என்ன, யாருக்கு பணம் சென்றது, எந்த காரணத்துக்காக பரிவர்த்தனை நடைபெற்றது என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், லஞ்சப் பணமும் அதே வழியில் கைமாறுகிறதா என்ற கோணத்தில் இந்தச் சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. G-Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகள் தற்போது விசாரணையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 43 அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், ரொக்கமாக ரூ.13.78 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரூ.1.59 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு வந்துள்ளன. இவற்றின் முழுமையான பின்னணி விசாரணை முடிவில் தெரியவரும்.
Also Read: கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியம்.. நேரில் பார்த்த கணவன் எடுத்த அதிரடி முடிவு!



