கூட்டுறவு அமைப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய நோக்கம் – அமித்ஷா..!

amithshan tn bjp

திருவனந்தபுரம்: கூட்டுறவு அமைப்புகள் மூலமாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொண்டு, பல்வேறு கூட்டுறவு சங்க திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது பல்வேறு தகவல்களை தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு கூட்டுறவு துறைக்கென தனி மத்திய அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததாக அமித்ஷா கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி, விவசாய முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட துறைகளில் முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பெண் பொருளாதார ரீதியாக முன்னேறும்போது, அதன் மூலம் முழு குடும்பமும் முன்னேறும் என்பதை பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளதாகவும், ‘கூட்டுறவு மூலம் செழிப்பு’ என்ற கொள்கை குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழை பெண்களை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் பெண்களின் சக்தியை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வசதிகளின் காரணமாக தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 2014-15ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறினார். மேலும், சுமார் 36 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முத்தலாக் முறையை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாககூறிய அவர் முன்பு ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது அவர்கள் ஆண் துணையின்றி புனிதப் பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய ஆயுதப்படைகளில் தற்போது 11,000-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளாக பணியாற்றி வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். அதேபோல், மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘லட்சாதிபதி தீதி’ திட்டத்தின் கீழ் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்கும் இலக்கு 2024ஆம் ஆண்டுக்கு முன்பே எட்டப்பட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.மேலும், 2029ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துடன் குடும்பங்களின் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவு அமைப்புகளை பயன்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமித்ஷா கூறினார்.

Also Read:Breaking : அன்னூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..! கரும்புகையால் பொதுமக்கள் கடும் அவதி..!

Newsnation_Admin

You May Like