இரவில் தூக்கம் வராமல் தவிப்பதையோ அல்லது நள்ளிரவில் விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாமல் போவதையோ பலர் சாதாரண விஷயமாக கடந்துபோய் விடுகிறார்கள். ஆனால், தொடர்ச்சியான தூக்கமின்மை பிரச்சினை (Insomnia) வெறும் சோர்வை மட்டும் தருவதில்லை; அது மூளை ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
‘ஸ்லீப் மெடிசின் ரிவியூஸ்’ (Sleep Medicine Reviews) இதழில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான ஆய்வுத் தொகுப்பில், தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களுக்குப் பக்கவாதம்ஏற்படுவதற்கான வாய்ப்பு 26% அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
13 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தூக்கமின்மைக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்சைமர் நோய்க்கும் தூக்கமின்மைக்கும் வலுவான பிணைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், தூக்கமின்மை இருந்தால் நிச்சயமாகப் பக்கவாதமோ அல்லது டிமென்ஷியாவோ ஏற்படும் என்று அர்த்தமில்லை என்றும், இது நோய்க்கான சாத்தியக்கூறை மட்டுமே காட்டுகிறதே தவிர, நேரடிக் காரணம் அல்ல என்றும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தூக்கமின்மைக்கும் மனநலத்திற்கும் இடையே இருவழித் தொடர்பு உள்ளது. மன அழுத்தமும் பதற்றமும் தூக்கத்தைக் கெடுக்கும்; அதே சமயம், தொடர்ச்சியான தூக்கமின்மை மனநிலையைப் பாதித்து மன உறுதியைக் குறைக்கும்.
மேலும், தொடர்ச்சியான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 28% அதிகமாக உள்ளது என்பதும், தூக்கமின்மைக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏதோ ஒரு சில நாட்கள் சரியாகத் தூக்கம் வரவில்லை என்பதற்காகப் பயப்படத் தேவையில்லை. ஆனால், தூங்குவதற்குப் போதுமான நேரமிருந்தும் தொடர்ந்து தூங்க முடியாமல் போவது அல்லது காலையில் புத்துணர்ச்சி இல்லாமல் விழிப்பது போன்றவை அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கினால், உடனே கவனம் செலுத்த வேண்டும்.
நாள்பட்ட தூக்கமின்மைக்கு “அறிவாற்றல் சார்ந்த நடத்தை சிகிச்சை” (CBT-I – Cognitive Behavioural Therapy for Insomnia) முதல் கட்டச் சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இது தூக்கத்தைக் கெடுக்கும் எண்ணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்ற உதவுகிறது.
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் பழக்கம், தூங்குவதற்கு முன் போன், டிவி போன்ற தூண்டுதல்களைத் தவிர்த்தல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை தூக்கத்தை மேம்படுத்தும். தூக்கத்தை அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றாகக் கருதாமல், உடலின் மிக முக்கியமான ஆரோக்கியக் காரணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முதன்மைச் செய்தியாகும்.



