ஓடும் காரின் மேற்கூரையில் காவலர் ஒருவர் தொற்றிக்கொண்டு செல்லும் காட்சிகள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தின. தப்பியோடிய காரை விடாமல் பிடிப்பதற்காக தலைமைக் காவலர் வேல்முருகன் மேற்கொண்ட இந்த துணிச்சலான நடவடிக்கையே தற்போது கவனம் பெற்றுள்ளது. சுமார் 40 கி.மீ. நீண்ட போலீஸ் துரத்தலுக்குப் பிறகு, அந்த காரில் இருந்த மூன்று பேரும் பிடிபட்டனர்.
இந்த சம்பவம் கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்தது. கோவில்பாளையம் போலீசார் விளாங்குறிச்சி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த காரை நிறுத்திய போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.
காரின் உள்ளே மூட்டைகள் இருந்ததால் அவற்றைச் சரிபார்க்க போலீசார் முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் இருந்தவர்கள் திடீரென வாகனத்தை இயக்கி அங்கிருந்து தப்பினர். போலீசாரை கீழே தள்ளிவிட்டு கதவுகளை மூடியபடி கார் வேகமாகச் சென்றது.
அந்த நேரத்தில் தலைமைக் காவலர் வேல்முருகன் எடுத்த முடிவுதான் சம்பவத்தின் திருப்பமாக அமைந்தது. தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி, அதை விடாமல் பிடித்துக்கொண்டார். காவலர் ஒருவர் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல் கும்பல் தொடர்ந்து வாகனத்தை ஓட்டியது.
விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, சிட்ரா வழியாக கார் கணியூர் நோக்கி சென்றது. மேற்கூரையில் காவலர் ஒருவர் ஆபத்தான நிலையில் பயணித்த காட்சியை அந்த வழியாகச் சென்ற சிலர் செல்போனில் பதிவு செய்தனர்.
இதற்கிடையில் தகவல் கிடைத்ததும் கணியூர் மற்றும் அவிநாசி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பல்வேறு காவல் வாகனங்கள் காரை பின்தொடர்ந்த நிலையில், சுமார் 40 கி.மீ. தூரத்துக்குப் பிறகு அவிநாசி பகுதியில் அந்த கார் சுற்றிவளைக்கப்பட்டது.
கார் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்தவர்கள் தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை விடாமல் துரத்தி மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பெங்களூரில் இருந்து சுமார் 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கொண்டு வந்து கோவையில் விநியோகிக்க அவர்கள் முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவத்தின்போது வேல்முருகன் காட்டிய துணிச்சல் காவல்துறை வட்டாரத்தில் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில், அவரை நேரில் அழைத்த முதலமைச்சர் விஜய், கடமையைச் சிறப்பாக செய்ததற்காக பாராட்டுத் தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் வேல்முருகனை நேரில் பாராட்டினார்.
Also Read: ரேஷன் வாங்காதவர்களுக்கு புதிய சிக்கல்.. அக்டோபர் 1 முதல் நடவடிக்கை!



