ரேஷன் கடையில் பல மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்பங்கள் இனி தங்களது கார்டின் நிலையை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கார்டுகளை அடையாளம் கண்டு, அவற்றின் சலுகைகளை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கை நாடு முழுவதும் அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது.
ரேஷன் விநியோகத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, குடும்பம் வேறு இடத்துக்கு சென்ற பிறகும் பழைய முகவரியில் பதிவு தொடர்வது போன்ற தரவுப் பிரச்சினைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில், உண்மையில் பயன்பாட்டில் உள்ள பயனாளிகளின் விவரங்களை மட்டும் துல்லியமாக பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போதைய கணக்கெடுப்பில், கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் எதுவும் பெறாத சுமார் 1.58 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் சலுகைகள் அக்டோபர் 1 முதல் முதற்கட்டமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இதனால் ரேஷன் கார்டு உடனடியாக செல்லாததாகிவிடும் என்று நினைக்க வேண்டியதில்லை. இந்த நடவடிக்கை முதலில் சலுகைகளை Hold செய்வது மட்டுமே. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக நீக்குவது அல்லது கார்டை நிரந்தரமாக ரத்து செய்வது என்ற முடிவு இதன் மூலம் எடுக்கப்படவில்லை.
முடக்கப்பட்ட கார்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட பயனாளிகள் 3 மாதத்திற்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை அல்லது அரசு இ-சேவை மையத்தை அணுகி, விரல்ரேகை உள்ளிட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளை முடிக்கலாம்.
e-KYC நடைமுறை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட பிறகு, தகுதியான பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் மீண்டும் தொடரும்.
நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றின் தரவுகளைத் தொடர்ந்து புதுப்பித்து, தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Also Read: சாலட் முதல் ஓட்ஸ் வரை.. ஆரோக்கிய உணவால் வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது?



