ஹோட்டல்கள் முதல் தெருவோர ஃபாஸ்ட் புட் கடைகள் வரை அசைவ உணவுகளுக்கு இணையாக தமிழர்களின் நாவை அடிமையாக்கியுள்ள ‘பனீர்’ உணவுகளுக்குப் பின்னால், மனித உயிரைப் பறிக்கும் அளவுக்குப் பேராபத்து மறைந்திருப்பது உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. 100% தூய பாலில் இருந்து தயாரிக்கப்பட வேண்டிய பனீருக்கு பதிலாக, சந்தையில் மலிவாகக் கிடைக்கும் போலியான ‘அனலாக் பனீர்’ (Analogue Paneer) எனும் நச்சுத்தன்மை கொண்ட மாற்றுப் பொருள் உணவகங்களில் டன் கணக்கில் புழங்கி வருவது நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதலின்படி, தூய பாலை திரளச் செய்து வடிகட்டுவதன் மூலமே அசல் பனீர் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு கிலோ தரமான பனீர் செய்ய குறைந்தது 5 முதல் 6 லிட்டர் பால் தேவைப்படுவதால், அதன் சந்தை விலை ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. ஆனால், உணவகங்களின் லாபவெறியை பயன்படுத்தி சந்தைக்கு வந்துள்ள ‘அனலாக் பனீர்’, பாலில் இருந்து செய்யப்படுவதே இல்லை.
மாறாக, விலை மலிவான பாமாயில் அல்லது தாவர எண்ணெய், மைதா மாவு, சிறிதளவு பால் பவுடர் மற்றும் செயற்கை ரசாயனங்களை ஒன்றாகக் கலந்து உறைவிட செய்து அச்சு அசல் பனீர் போலவே போலியாகத் தயாரிக்கப்படுகிறது. கிலோ வெறும் ரூ.120 முதல் ரூ.150 வரை மட்டுமே கிடைப்பதால், உணவகங்கள், பீட்சா மற்றும் பர்கர் கடைகளில் இந்த உறைந்த ‘பாமாயில் கட்டிகள்’ மசாலாக்களுக்குள் மறைக்கப்பட்டு மக்களுக்கு தாராளமாக பரிமாறப்படுகின்றன.
சுவைக்காக நாம் ருசித்து சாப்பிடும் இந்தப் போலி பனீர், உடலுக்குள் பாயும் கொடிய ‘சைலண்ட் கில்லர்’ என இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அசல் பனீரில் புரதமும் கால்சியமும் நிறைந்துள்ள வேளையில், அனலாக் பனீரில் உள்ள ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவரக் கொழுப்புகள் (Hydrogenated Fats) ரத்த நாளங்களில் நேரடியாக சென்று கெட்ட கொழுப்பாக (LDL) படிகின்றன. இது இதய ரத்தக் குழாய்களில் அடைப்பை (Atherosclerosis) ஏற்படுத்தி, இளம் வயதிலேயே திடீர் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கடுமையான செரிமான கோளாறுகளை உண்டாக்கும் அபாயம் பன்மடங்கு அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



