மறைந்த நடிகர் நானா படேகரை விமர்சிக்கும் வகையில் மீண்டும் சர்ச்சைக்குரிய பதிவை விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, Evil Death என பதிவிட்டது பெரும் விவாதமான நிலையில், தற்போது நானா படேகர் நரகத்தில் எரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 18 ஆண்டுகள் என் வாழ்க்கையை நரகமாக்கினார். அவரின் ஆன்மா கொடிய வலியாலும் சித்ரவதையாலும் வதைக்கப்படட்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி கோவாவில் மாரடைப்பு காரணமாக தனது 75ஆவது வயதில் காலமானார். முன்னதாக, அவர் மீது பாலியல் சீண்டல் புகாரை வீசியிருந்த தனுஸ்ரீ தத்தா, அவரது மறைவை தனக்குக் கிடைத்த “தக்க நீதி” என்று வர்ணித்திருந்தார். இந்நிலையில், நானா படேக்கரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும், பொதுவெளியில் பாராட்டுபவர்களையும் சமூக வலைதளத்தில் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள தனுஸ்ரீ தத்தா, “இந்த தீய மனிதர்கள் தங்கள் சொந்த தீயில் எரிந்து சாம்பலாக வேண்டும். நானாவின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் சாம்பலாகுவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு கொடுமைக்காரனைப் பாராட்டி அவர்கள் வெளியிடும் வார்த்தைகள் என் இதயத்தை எரித்துவிட்டன” என்று ஆவேசமாகத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நானா சென்றடையும் இடத்திற்கே அந்த ஆதரவாளர்களின் ஆன்மாக்களையும் அனுப்புவேன் என்றும், தான் கடந்த காலத்தில் பட்ட வேதனைகளை அடுத்த 10,000 ஆண்டுகளுக்கு அந்த ஆதரவாளர்களும் அனுபவிப்பார்கள் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். தன்னைத் துன்புறுத்திய ஒருவரைப் பகிரங்கமாகப் பாராட்டி நியாயப்படுத்துபவர்களின் உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மறைந்த நடிகர் நானா படேகரை விமர்சித்து தனுஸ்ரீ தத்தா இரண்டு பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், “கடந்த 18 ஆண்டுகளாக என் வாழ்க்கையை நரகமாக்கிய நானா படேகர், நரகத்தில் எரியுங்கள். நரகத்தின் மிகக்கொடூரமான சித்ரவதைகளுக்கு உங்கள் ஆன்மா ஆளாகட்டும். உங்களைப் போன்ற ஒரு தீயவன் அங்கிருந்து தப்பியோட முடியாது என்பதை நான் உறுதி செய்வேன்” என அவர் பதிவிட்டிருந்தார்.



