உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தொடர் தாக்குதல்கள், கோகோ கோலா (Coca-Cola), மெக்டொனால்டு (McDonald’s) மற்றும் பெப்சிகோ (PepsiCo) போன்ற உலகின் முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளை இலக்காகக் கொண்டு தாக்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்க வர்த்தக வட்டாரங்களிலும் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகில் அமைந்திருந்த கோகோ கோலா ஆலை, கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் முற்றிலும் தரைமட்டமானது.
செப்டம்பர் 25 அன்று கிவ் பகுதியில் உள்ள மெக்டொனால்டு நிறுவனத்தின் தளவாட கிடங்கு தாக்கப்பட்டதில், விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு சில உணவகங்களின் சேவைகள் முடங்கின.
மைக்கோலேவ் பகுதியில் உள்ள பெப்சிகோ உற்பத்தி ஆலை கடந்த ஆகஸ்ட் மாதம் சேதமடைந்ததாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்தது. ஓரியோ (Oreo) உள்ளிட்ட அமெரிக்க பிராண்டுகளின் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை தலைவர் ஆண்டி ஹண்டர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமெரிக்க நிறுவனங்களின் சொத்துகளும் முதலீடுகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தாலும், டிரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வதைக் காரணம் காட்டி, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தவிர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் அமெரிக்க நிறுவனங்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களை குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதல்களை விரிவுபடுத்துவது அமெரிக்காவிற்கு விடுக்கப்படும் சமிக்ஞை என்று குறிப்பிட்டிருந்தார். வெள்ளை மாளிகைத் தரப்போ, போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகத் தெரிவித்துள்ளது.



