வீட்டில் பொரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை 1,2 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டுமென FSSAI அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யை சூடாக்கும் போது அதன் வேதியல் தன்மை மாறும் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமைப்பதால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளது. ஆகையால் முடிந்தவரை எண்ணெய்யை உடனுக்குடன் பயன்படுத்தி விடுவதே சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து, முன்னணி உணவு நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் விரைவு வணிக தளங்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதுடன் நின்றுவிடாமல், விளம்பரங்கள், பேக்கேஜிங் விவரங்கள், ஆன்லைன் தயாரிப்புப் பட்டியல்கள் மற்றும் சேமிப்பு மையங்களின் சூழல் என முழு விநியோகச் சங்கிலியையும் FSSAI தனது தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது.
தவறான விளம்பரங்கள், உண்மைக்கு மாறான வாக்குறுதிகள் மற்றும் லேபிளிங் விதிமீறல்கள் தொடர்பாக உணவு, பானங்கள், பால் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்து துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை FSSAI அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது சர்ச்சைக்குரிய விளம்பரங்களைத் திரும்பப் பெறுதல், பேக்கேஜிங் லேபில்களை மாற்றுதல் மற்றும் ஆன்லைன் தளங்களில் இருந்து சில பொருட்களை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
முக்கியப் புதிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள்:
சிவப்பு நிற எச்சரிக்கை லேபில்கள்: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக இருந்தால், பாக்கெட்டின் முன்பக்கத்திலேயே பளிச்செனத் தெரியும் வகையில் சிவப்பு நிற அறுகோண (Red Hexagonal) எச்சரிக்கை லேபில்களை ஒட்டும் புதிய விதி முன்மொழியப்பட்டுள்ளது.
விரைவு வணிக (Quick-Commerce) தளங்களுக்குக் கெடுபிடி: பிளிங்கிட், செப்டோ போன்ற விரைவு விநியோகச் செயலிகள், தங்களது ஆப்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பேட்ச் எண்களைக் கட்டாயம்க் காட்ட வேண்டும். மேலும், அவர்களின் ‘டார்க் ஸ்டோர்ஸ்’ (Dark Stores) எனப்படும் சேமிப்புக் கிடங்குகளின் சுகாதாரமும் ஆய்வு செய்யப்படும்.
ஹோட்டல்கள் மற்றும் க்ளவுட் கிச்சன்களுக்குச் செக்: பிரபல ஹோட்டல் சங்கிலிகள், QSR உணவகங்கள் மற்றும் க்ளவுட் கிச்சன்களுக்கு 30-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மெனு கார்டில் கலோரி விவரங்களைக் குறிப்பிடுவது, சுகாதாரம் மற்றும் உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போலி பன்னீர் விற்பனைக்குத் தடை: செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அனலாக் பன்னீரை (Analogue Paneer) ‘பன்னீர்’ என்ற பெயரில் விற்கக் கூடாது எனவும் FSSAI திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் செலவினங்கள்:
சட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற உள் தணிக்கைக் குழுக்களை அமைத்தல், ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்துதல் போன்ற காரணங்களால் நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும்.
விதிமுறைகளுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்கள் விநியோகத் தடை மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



