மகளைப் பார்க்க வரவழைத்து மனைவியைக் கொன்ற கணவர்.. இந்தியாவுக்குத் தப்ப முயன்றபோது கைது!

WhatsApp Image 2026 10 17 at 10.21.17 AM 1

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வேறொருவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பியதால் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.


கருத்து வேறுபாடு காரணமாக அங்குர் படேலும் அவரது 32 வயது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், மனைவி வேறொருவருடன் லூசியானாவுக்குச் சென்றது படேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகளைச் சந்திக்கலாம் எனக் கூறி மனைவியைச் சிகாகோவுக்கு வரவழைத்துள்ளார்.

ஆனால், மகள் ஏற்கெனவே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது மனைவிக்குத் தெரியாது. சிகாகோ வந்த அவர், கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடியிருப்புக்கு வெளியே மனைவியின் புதிய துணை காத்திருந்துள்ளார். அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அந்த நபர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும், சரியான குடியிருப்பைக் கண்டறிய முடியாததால் போலீசார் அப்போது அங்கிருந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்று இரவு அங்குர் படேலின் நண்பர்கள் அவரது வீட்டுக்கு வந்தபோது, சலவை இயந்திரம் அருகே அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வில், உயிரிழந்த பெண்ணின் உடலில் தற்காத்துக் கொள்ள முயன்றதற்கான காயங்கள் இருந்தது தெரியவந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.

கொலைக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்ட படேல், சிகாகோவிலுள்ள ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டிருந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கியதாகவும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை மறைத்து வைத்துவிட்டு புதிய ஆடைகளை வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுநாள் இந்தியாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக போலீசார் அவரைக் கைது செய்தனர். மனைவி புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: “அப்பா, என்ன தொடாதீங்கப்பா” கெஞ்சிய சிறுமி… பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; இறுதியில் நடந்த அதிர்ச்சி!

Saranya

Next Post

பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி திடீர் மாயம்! 5 நாட்களாகியும் கிடைக்காத தடயம்! 100 போலீசார் தீவிர தேடுதல்!

Sat Oct 17 , 2026
பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த சில மணி நேரங்களிலேயே 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி அதிகாலையில் மாயமான நிலையில், ஐந்து நாட்களாகியும் அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் களமிறங்கித் தேடி வரும் நிலையில், சிறுமிக்கு என்ன நடந்தது என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே […]
WhatsApp Image 2026 10 17 at 7.45.43 AM 1

You May Like