தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை (அக். 21) மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் தென் மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.
அக்டோபர் 22ஆம் தேதியன்று தென் மாவட்டங்களை நோக்கி மழைப்பொழிவு தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அப்பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.



