ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? உடல் காட்டும் இந்த 10 அறிகுறிகளைக் கவனியுங்கள்!

sugar rice 1

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? எந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும்? நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கும் இந்த அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.


மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பிரணவ் கோடி, உடலில் போதுமான இன்சுலின் சுரக்காதபோதோ அல்லது சுரக்கும் இன்சுலினைச் செல்கள் சரியாகப் பயன்படுத்தாதபோதோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம் என விளக்குகிறார். இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடல் செல்களுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது. இதன் மூலம் செல்கள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்துகின்றன.

ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்ற முயற்சிக்கின்றன. இதனால் உடலில் இருந்து அதிகளவு திரவம் வெளியேறி, அடிக்கடி தாகம் எடுப்பதும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஏற்படலாம். குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதைக் கவனிக்க வேண்டும்.

போதுமான நேரம் ஓய்வெடுத்த பிறகும் தொடர்ந்து சோர்வாக இருப்பதும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். உடலில் குளுக்கோஸ் இருந்தாலும், இன்சுலின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்பால் செல்களால் அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் சோர்வு ஏற்படக்கூடும். இருப்பினும், ரத்தச்சோகை, தைராய்டு பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு உள்ளிட்ட பிற காரணங்களாலும் சோர்வு ஏற்படலாம்.

சாப்பிட்ட பிறகும் அடிக்கடி பசி எடுப்பது, வாய் வறட்சி, சருமத்தில் அரிப்பு போன்ற மாற்றங்களும் சிலருக்கு ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது சரும வறட்சிக்கு வழிவகுக்கலாம். அதேபோல், கண்களில் உள்ள திரவச் சமநிலை பாதிக்கப்படுவதால் பார்வை மங்கலாகத் தெரியவும் வாய்ப்புள்ளது. திடீரெனப் பார்வையில் மாற்றம் ஏற்பட்டாலோ, பார்வை இழப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதும், அடிக்கடி சிறுநீரகப் பாதைத் தொற்று அல்லது பூஞ்சைத் தொற்று ஏற்படுவதும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். ரத்தச் சர்க்கரை நீண்ட காலமாக அதிகமாக இருந்தால், நோய் எதிர்ப்புச் செயல்பாடு மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, காயங்கள் ஆறுவது தாமதமாகலாம். மேலும், உணவுப் பழக்கத்திலோ உடற்பயிற்சியிலோ மாற்றம் செய்யாமல் உடல் எடை குறைவதும் சிலருக்கு ஏற்படலாம். உடலால் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாதபோது, ஆற்றல் தேவைக்காகச் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் பயன்படுத்தத் தொடங்குவதால் இத்தகைய எடை இழப்பு ஏற்படலாம்.

கைகள் மற்றும் கால்களில் தொடர்ந்து கூச்ச உணர்வு, எரிச்சல் அல்லது உணர்வின்மை ஏற்படுவதும் நீண்டகாலமாகக் கட்டுப்பாடற்ற ரத்தச் சர்க்கரை அளவுடன் தொடர்புடைய நரம்புப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், வைட்டமின் குறைபாடு மற்றும் நரம்பு அழுத்தம் உள்ளிட்ட பிற காரணங்களாலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், பருப்பு வகைகள், முழுத் தானியங்கள் மற்றும் முழுப் பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்புகள் மற்றும் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து கொண்ட உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். உணவின் அளவிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது, போதுமான தூக்கம் பெறுவது மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை ரத்தச் சர்க்கரை மேலாண்மைக்கு உதவலாம். நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, அவ்வப்போது எழுந்து நடமாடுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கியமாக, இந்த அறிகுறிகள் இருப்பதால் மட்டும் ரத்தச் சர்க்கரை அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்த முடியாது. சிலருக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாக இருந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் இருக்காது. எனவே, அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருந்தால், மருத்துவரை அணுகி ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

Also Read: நகைக்காக செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்.. சக ஊழியரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Saranya

You May Like