நகைக்காக செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்.. சக ஊழியரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

நகைக்காகத் திட்டமிடப்பட்ட கொலை, சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல், கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகம் என ஈரோடு அருகே செவிலியர் உத்ராவின் மரணம் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைச் சந்தித்துள்ளது. இந்த வழக்கில், உத்ராவுடன் பணியாற்றிய சரவணனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், நகையைக் கொடுக்க மறுத்ததால் உத்ராவைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்ரா (26), கடந்த அக்டோபர் 14-ம் தேதி மாயமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவருக்குத் திருமணமாகி ஓராண்டுதான் ஆகியிருந்தது. கணவர் ரஞ்சித்குமார் கட்டுமானத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இருவரும் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்தனர்.

அன்று காலையில் உத்ராவை வழக்கம்போல் மருத்துவமனையில் விட்டுச் சென்ற ரஞ்சித்குமார், இரவில் அவரை அழைத்துச் செல்ல வந்தபோது அவர் ஏற்கெனவே கிளம்பிவிட்டதாகத் தகவல் கிடைத்தது. வீட்டுக்குச் சென்றும் மனைவியைக் காணாததால் செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். அழைப்பை உத்ரா ஏற்காததால் பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து அக்டோபர் 15-ம் தேதி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தத் தேடுதல் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், அது காணாமல்போன உத்ரா என்பது தெரியவந்தது.

மனைவியின் மரணச் செய்தியைக் கேட்ட ரஞ்சித்குமார், மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். துயரத்தைத் தாங்க முடியாமல் மருத்துவமனை அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டனர். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, கொலையாளியைக் கண்டறிய ஐந்து காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. உத்ரா பணியாற்றிய மருத்துவமனை மற்றும் அவர் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்களில் இருந்த சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. உடன் பணியாற்றியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சரவணன் மீது சந்தேகம் எழுந்தது. மேலும், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்த காகிதத்தில் அவரது செல்போன் எண் இருந்ததும் போலீஸாரின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து சரவணனை அழைத்து விசாரித்தபோது, உத்ராவைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். உத்ரா அன்று விரைவாகப் பணியை முடித்துச் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்த சரவணன் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். அதை நம்பி அவருடன் சென்ற உத்ராவை, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஆள் நடமாட்டம் குறைந்த சர்வீஸ் சாலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு உத்ரா அணிந்திருந்த நகைகளைக் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதையடுத்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்ததாக சரவணன் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். பின்னர் உத்ராவின் கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தாலிச் சங்கிலியை எடுத்துக்கொண்ட அவர், விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் உடலில் இருந்த ஆடைகளைக் களைந்து சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டதால் பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை என்றும், அதனால் உத்ராவின் நகைகளைக் குறிவைத்ததாகவும் அவர் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். சரவணன் மீது ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். உத்ராவிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. உடன் பணியாற்றிய செவிலியரையே நகைக்காகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முதல் நாளிலேயே வசூல் வேட்டை!. அட்வான்ஸ் புக்கிங்கில் ‘ராமாயணா’ நிகழ்த்திய புதிய சாதனை!

Saranya

Next Post

இந்தியா - பாகிஸ்தான் மோதல் இல்லை!. 2027 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு!. அதிர்ச்சி கொடுத்த ஐசிசி!.

Wed Oct 21 , 2026
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2027-ம் ஆண்டுக்கான மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை வங்கதேசம் மற்றும் நேபாளம் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெறவில்லை. நடப்புச் சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் […]
U19 T20 World Cup 30kb

You May Like