இன்றைய செல்பி மோக காலத்தில் கூர்மையான தாடை அமைப்பு மற்றும் ஒல்லியான முகம் வேண்டும் என்ற ஆசை பலரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாடையின் கீழ் சேரும் கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக, மணிக்கணக்கில் சூயிங்கம் மெல்லுவது, வலைதளங்களில் வரும் பேஸ் யோகா பயிற்சிகளை செய்வது மற்றும் விலை உயர்ந்த அழகு சாதன கிரீம்களை வாங்குவது என பலரும் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். ஆனால், இந்த முறைகள் உண்மையில் பலனளிக்குமா அல்லது முக கொழுப்பை குறைக்க அறிவியல் சொல்லும் வழிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மருத்துவ அறிவியலின்படி, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள கொழுப்பை மட்டுமே குறிவைத்து கரைக்கும் முறை சாத்தியமற்றது என நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். சூயிங்கம் மெல்லுவதாலோ அல்லது முக தசைகளை விதவிதமாக அசைப்பதாலோ முகத்தில் உள்ள கொழுப்பு முழுமையாக கரைந்துவிடும் என்பதற்கு போதிய அறிவியல் சான்றுகள் இல்லை. ஒருவரது முக வடிவம், தசை அமைப்பு மற்றும் கொழுப்பு பகிர்வு ஆகியவை பெரும்பாலும் மரபணுக்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையை சார்ந்தே அமைகின்றன.
அதேபோல், முகம் பெருத்து அல்லது வீங்கியது போல காணப்படுவதற்கு கொழுப்பு மட்டுமே ஒரே காரணமல்ல; உடலில் நீர் தேங்குவதும் இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது நீர் தேக்கத்தை அதிகரித்து முக வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு முறையை பின்பற்றுவது முக ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.
முக தோற்றத்தை அழகாக்க குறுக்குவழிகளை தேடுவதை விட, ஒட்டுமொத்த உடல் எடையை கட்டுக்குள் வைப்பதே நிலையான தீர்வாகும். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்ற பயிற்சிகளுடன் உடல் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும்போது, உடல் கொழுப்பு குறைந்து முகத்திலும் இயல்பான மாற்றம் ஏற்படும். மேலும், தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கத்தை உறுதி செய்வது மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்ப்பது போன்றவை முக வீக்கத்தை தடுக்க உதவும். விளம்பரங்களில் வரும் கிரீம்களை கண்மூடித்தனமாக நம்பாமல், முக வீக்கம் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது திடீரென முகத்தில் மாற்றம் தெரிந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பான வழியாகும்.
Read More : ஏன் எனக்கு ரீல்ஸ் எடுக்க தெரியாதா? யார் ஆட்சி நடத்தினாலும் அதிமுக தான்..! தவெக அரசை விளாசிய இபிஎஸ்!



