ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை ஆரோக்கியம் குறித்து வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய ஆய்வு ஒன்றில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் அதிகளவில் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பது உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற ‘ஜமா நியூராலஜி’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆறு கண்டங்களைச் சேர்ந்த 18 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 22 நீண்டகால ஆய்வுகளில் இருந்து 38,418 பெரியவர்களின் தரவுகள் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக் காலத்தில் மொத்தம் 3,001 பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்குப் புதிய பாதிப்பு விகிதம் அதிகம்:
பெண்களுக்குப் புதிய டிமென்ஷியா பாதிப்பு விகிதம் ஒரு வருடத்திற்கு 1,000 பேருக்கு 10.6 என்ற அளவில் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், ஆண்களுக்கு இந்த பாதிப்பு 1,000 பேருக்கு 8.6 என்ற அளவிலேயே உள்ளது.
இந்த வித்தியாசத்திற்கான சரியான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. பெண்கள் பொதுவாக ஆண்களை விட நீண்ட காலம் வாழ்வது ஒரு காரணமாக இருந்தாலும், ஆயுட்காலம் மட்டுமே இந்த வித்தியாசத்திற்கு முழுமையான காரணம் அல்ல என்றும், உயிரியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணங்கள் குறித்தும் மேலும் ஆய்வுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பெண்களுக்கு ஏன் அதிக ஆபத்து இருக்கக்கூடும்?
நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் அன்றாடப் பணிகளைச் செய்யும் திறனைப் பாதிக்கும் நோய்களின் தொகுப்புதான் டிமென்ஷியா ஆகும். இதில் ‘அல்சைமர் நோய் மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நிறுத்தம் (Menopause) காலத்தின் போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், பெண்களின் நீண்ட ஆயுட்காலம், கல்வி வாய்ப்புகளில் உள்ள வேறுபாடுகள், இதய ஆரோக்கியம் மற்றும் பிற காரணிகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் டிமென்ஷியா பாதிப்பு விகிதம் 1,000 பேருக்கு 13.6 ஆக உள்ளது. இதுவே உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 8.3 ஆக மட்டுமே இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உலகளவில் 2023 ஆம் ஆண்டில் சுமார் 11.4 மில்லியன் புதிய டிமென்ஷியா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 24.7 மில்லியனாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:
அனைத்து பாதிப்புகளையும் முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், உடற்பயிற்சி செய்வது, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது, புகைப்பிடித்தலைத் தவிர்ப்பது, மது பழக்கத்தைக் குறைப்பது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
தொடர்ந்து நினைவாற்றல் குறைபாடு, பரிச்சயமான செயல்களைச் செய்வதில் சிரமம், குழப்பம் போன்றவை ஏற்பட்டால் அதை இயல்பான முதுமை என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.
குறிப்பாக, வயது முதிர்ந்த பெண்கள் மத்தியில் டிமென்ஷியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும் மிகவும் முக்கியமானது.



