தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர் தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை டெய்சி மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம்!
ஆதவ் அர்ஜுனாவும், டெய்சி மார்ட்டினும் கடந்த 14 ஆண்டுகளாக அன்பு, புரிதல் மற்றும் பல்வேறு வாழ்க்கை மாற்றங்களுடன் இணைந்து பயணித்ததாக டெய்சி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நண்பர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பல்வேறு பொறுப்புகளுடன் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதிகளாகப் பிரிந்து, தனித்தனியான பாதைகளில் பயணிக்க பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது இருவரது வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், தங்களது குழந்தையின் மகிழ்ச்சி, நலன் மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்வதே முதன்மையான நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா குறித்து டெய்சி உருக்கமான பதிவு!
ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதும் மரியாதை இருக்கும் என்றும், அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்துப் பாதைகளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார விரும்புவதாகவும் டெய்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாற்றத்தை இருவரும் கடந்து செல்லும் நிலையில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து, புரிதலுடனும் அன்புடனும் தனியுரிமையைப் பாதுகாக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தையின் நலனே முக்கியம்!
தங்களது பிரிவுக்குப் பிறகும் குழந்தையை இணைந்து வளர்ப்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாக டெய்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குழந்தையின் மகிழ்ச்சியும் நலனும் எப்போதும் தங்களது மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.



