நடிகர் விஜயின் கடைசி படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ தற்போது ரிலீஸ் தேதிக்காக ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பயணத்தை முடித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் அவர் உயர்ந்துள்ள சூழலில், இந்த படம் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அளித்துள்ள பேட்டியில், படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறும் செயல்முறையில் தாமதம் ஏற்பட்டதே ரிலீஸ் தள்ளிப்போவதற்கான முக்கிய காரணமாகும். ஆரம்பத்தில் சென்சார் குழு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் ஒரு புகார் வந்ததாக கூறி படம் ரிவிஷன் கமிட்டிக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் படக்குழு நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், பின்னர் தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளின் அடிப்படையில் மீண்டும் மறு ஆய்வு செயல்முறை நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். சான்றிதழ் கிடைத்தவுடன் படம் உடனடியாக திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் அவர் உறுதி செய்துள்ளார். இதற்கிடையில், சில ரசிகர்கள் படத்தின் டைட்டில் கார்டில் ‘தளபதி விஜய்’ என்பதற்குப் பதிலாக ‘தமிழக முதலமைச்சர் விஜய்’ என குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம் இதுவரை வெளியாகாத நிலையில், புதிய ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Read more: “120 + 30 ஆதரவு..?” சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. தவெக அரசின் பலம் என்ன..?



