சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை NIA கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கிலாபாத் பிரிவினை வாதம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இது தொடர்பாக சென்னை காவல்துறையின் சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும் இது சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது,
இதையடுத்து அந்த வீடியோக்களை அப்லோடு செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரையும் அவரது வீடியோக்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஹமீது உசேன், அவரது தந்தையான அகமது மன்சூர், தம்பி அப்துல் ரகுமான் உள்ளிட்ட சிலர் ராயப்பேட்டை ஜஹான் தெருவில் ரகசியமாக கூட்டங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தடை செய்ய தீவிரவாத இயக்கம் ஒன்றுக்கு அடியாட்களாக சேர்த்து வந்தது தெரிய வந்தது.
இவரின் பேச்சைக் கேட்டு அவரை தொடர்பு கொள்ளும் நபர்களை ராயப்பேட்டைக்கு வரவழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடத்தி அவர்களை தடை செய்யப்பட்ட அமைப்புக்கு தீவிரவாதிகளாக சேர்த்துள்ளார். ஹமீது உசேன் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது தேசிய புலனாய்வு முகமை களமிறங்கி இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் என்ஐஏ கேட்டு பெற்றுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர்கள் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஜூன்-4 தேர்தல் முடிவுகள்… அன்றைய நாளில் வெற்றிக் கொடி…! முதல்வர் ஸ்டாலின் கடிதம்