மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் எண்ணும் பணி கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு விலகிக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்ட போதும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இருக்காது. 2 மாத காலத்திற்கும் மேலாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பல்வேறு பணிகள் தடைபட்டிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாமல் இருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்த ஒரு சில நாட்களில் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் நிலையில், ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். எனவே, ஜூலை மாத மகளிர் உரிமைத் தொகைக்கான பணம் புதிதாக இணைய உள்ளவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களும் பல மாதங்களாக அட்டைகள் கிடைக்கப்பெறாமல் இருந்தனர். தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், விரைவில் புதிய ரேஷன் அட்டைகளும் விநியோகிக்கப்பட உள்ளன.
Read More : ’தமிழ்நாட்டை எப்போதும் உங்களால் ஆள முடியாது’..!! ராகுல் காந்தியின் வீடியோ வைரல்..!!