முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 2வது முறையாக கூடுதலாக பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பேசி வரும் முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே செலுத்தப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை செலுத்த கடந்த காலங்களில் அவகாசம் இருந்தது.
ரிசர்வ் வங்கியின் கடிதத்தில் அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் படி முழு தொகையை எயையும் 45 நாட்களில் செலுத்த வேண்டும் என்று நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் ரூ.75,000 வரையிலான பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். அதாவது, முன்பு ரூ.50,000 வரையில் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. அது தற்போது, ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பயிர் கடன் தள்ளுபடியால் ரூ.953.06 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழக விவசாயிகளின் நலனிலே நமது நலன் உள்ளது. 6720 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.



