இன்றைய உலகத்தில் “என் குடும்பம், என் வாழ்க்கை” என்ற எண்ணமே அதிகமாகி வருகிறது. ஒரே வீட்டில் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே பேச நேரமில்லாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அந்த கிராமத்தில் எந்த வீட்டிலும் சமையலறை இல்லை. அடுப்பு இல்லை. தனித்தனியாக சமைப்பதுமில்லை. இருந்தாலும், அங்குள்ள மக்கள் அனைவரும் தினமும் வயிறார சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சாந்தாங்கி என்ற இந்தச் சிறிய கிராமம்தான் தற்போது சமூக வலைதளங்களிலும் சுற்றுலா வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 1000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், அனைவருக்கும் ஒரே இடத்தில் உணவு தயாரிக்கப்படுகிறது. பின்னர் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துகின்றனர். இதனால், இந்தக் கிராமம் “ஒரே குடும்பமாக வாழும் கிராமம்” என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இந்த நடைமுறை வெறும் சமையல் முறையல்ல; இது ஒற்றுமை, அன்பு மற்றும் சமூக உணர்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கிராம மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். அதனால் தான், தனித்தனியாக சமைப்பதற்குப் பதிலாக அனைவரும் சேர்ந்து சமுதாய சமையலறை முறையை பின்பற்றி வருகின்றனர்.
இந்த யோசனை உருவான பின்னணியும் மிகவும் சுவாரஸ்யமானது. கிராமத்தில் வாழும் முதியவர்களுக்கு தினசரி சமைப்பது கடினமாக இருந்ததால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொதுச் சமையலறையை தொடங்கினர். ஆரம்பத்தில் இது உதவித் திட்டமாக இருந்தாலும், பின்னர் அது முழு கிராமத்தின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது.
தற்போது தினமும் சுமார் 100 கிராம மக்கள் மாறிமாறி சமையல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி வெட்டுவது முதல் உணவு பரிமாறுவது வரை அனைத்துப் பணிகளையும் அனைவரும் இணைந்து செய்கின்றனர். இதனால் எந்த ஒருவருக்கும் வேலை சுமையாக இருப்பதில்லை. “ஒன்றுபட்டால் எதுவும் சாத்தியம்” என்பதை இந்த கிராம மக்கள் வாழ்வில் நிரூபித்து வருகின்றனர்.
பண்டிகை நாட்களில் இந்த கிராமம் இன்னும் உற்சாகமாக மாறிவிடுகிறது. அப்போது சிறப்பு உணவுகள் தயாரிக்கப்பட்டு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடி கொண்டாடுகின்றனர். உறவினர்கள் மற்றும் விருந்தினர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த வித்தியாசமான வாழ்க்கை முறையை காண தற்போது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கிராம மக்கள் வரும் விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்று, தங்களது சமுதாய சமையலறையில் தயாரிக்கப்பட்ட உணவையே பரிமாறுகின்றனர். இதனால், இந்த கிராமம் இந்திய ஒற்றுமையின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.
நவீன வாழ்க்கையில் மனிதர்கள் தனிமையில் வாழத் தொடங்கியுள்ள நிலையில், “ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்” என்பதை இந்தச் சிறிய கிராமம் உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது. சமூக உணர்வு, அன்பு, பகிர்வு மற்றும் மனிதநேயம் இன்னும் உயிருடன் இருப்பதை சந்தான்கி கிராமம் நிரூபித்துள்ளது.
Read more: Breaking : அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!



