திரையுலகில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பல நடிகைகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பெண்கள் தைரியமாக கருத்து தெரிவித்தாலே அவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழிவான விமர்சனங்கள் பதிவிடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் மனநிலை மாற வேண்டும் என்றும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பல தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், இயக்குநர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெரும் நடிகையாக மாறினார். அந்த படத்தில் அவர் அரைநிர்வாணமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவரது தைரியமான நடிப்பை பலரும் பாராட்டினார்கள். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சீரியல் துறையில் இருந்து விலகியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாக கூறிய அவர், சீரியல் துறையில் நடிகர், நடிகைகளுக்கு போதிய மரியாதை, உரிய சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை என்பதால் அந்த துறையை விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் பெண்களை விமர்சிக்கும் விதம் குறித்து தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். பெண்கள் மீது இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டதாகவும், அதே தவறை ஒரு ஆண் செய்தாலும் அவரை அதே அளவில் யாரும் விமர்சிப்பதில்லை என்றும் கூறினார். தவறு செய்திருந்தால், பெண்ணை மட்டும் குற்றம் சாட்டாமல் அதில் தொடர்புடைய அனைவரையும் ஒரே அளவில் பார்க்க வேண்டும் என்றார். மேலும், சமூக வலைதளங்களில் தனக்கு வரும் விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசினார்.
தனது கருத்துகளுக்கு கீழ் ஒருவர், “உனக்கு எத்தனை புருஷன்?” என்று பதிவிட்டதாகவும், அதற்கு தான் எனக்கு 99 புருஷன், 100வது புருஷனாக நீ வரியா என்று துணிச்சலாக பதிலளித்ததாகவும் கூறினார். பெண்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் போது அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி மௌனமாக்க முயற்சிப்பது தவறான மனநிலை என்றும், அது மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் மீது இழிவான விமர்சனங்களை முன்வைப்பதை சமூகமே நிறுத்த வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்துடன் பெண்களை மதிக்கும் பண்பாடு உருவாக வேண்டிய நேரம் இது என்றும் ரேகா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



