விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன் தமிழரசன் (26). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காதல் விவகாரம் பூதாகரமாய் வெடித்த நிலையில் தமிழரசன் சேலத்திற்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பிறகு வீடு திரும்பவில்லை.
தமிழரசன் சேலத்திற்கு சென்றிருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்தனர். செல்போன் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் விவகாரத்தால் பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
போலீசார் அளித்த தகவலின்படி, நேற்று முன்தினம் இரவு தமிழரசன் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கர பாண்டி என்ற அருண் (22), மணிகண்டன் (20), ரஞ்சித் குமார் (24), ஜெயசங்கர் (22), முத்துப்பா (22), சுரேஷ் (42) ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தவிர மற்ற ஆறு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



