டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ப்ளே ஸ்கூல் ஒன்றில், மூன்று வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குழந்தை பராமரிப்பாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சிறுவனுக்குக் காதில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தினரின் கூற்றுப்படி, சிறுவன் சில நாட்களாகவே மிகவும் சோர்வடைந்து காணப்பட்டுள்ளான். இந்நிலையில், ஆகஸ்ட் 18 அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவனுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர்கள் சிறுவனை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது அறிவுறுத்தலின் பேரில் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகியுள்ளனர். அப்போது சிறுவனின் காது செவிப்பறை வீங்கியிருப்பதும், அது கிழியும் அபாயத்தில் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உடனடியாக பள்ளி நிர்வாகத்தை அணுகி, சிறுவன் தாக்கப்பட்டானா என்று கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில் பள்ளி நிர்வாகம் அத்தகைய குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆனால், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில், சிறுவனை துணி மூலம் நாற்காலியில் கட்டிவைத்து, பள்ளி ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இது குறித்துச் சிறுவனின் தந்தை நவ்நீத் சௌத்ரி கூறுகையில், தனது மகன் தொடர்ந்து அடித்து, உதைக்கப்பட்டதாகவும், அவனது காதுகள் கொடூரமாகத் திருகப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பள்ளி நிர்வாகத்தின் மீதும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பள்ளி நிர்வாகம், உரிமையாளர்கள் மற்றும் முதல்வர் ஆகியோரே முழுப் பொறுப்பு. தினசரி சிசிடிவி காட்சிகளைக் கண்காணிக்கும்போது, குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது அவர்களுடைய கடமை அல்லவா?” என்று நவ்நீத் சௌத்ரி வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் பள்ளியின் பெண் பராமரிப்பாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் மற்றொரு ஆசிரியரின் பங்கை விசாரித்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், இந்தத் தாக்குதல் மற்றும் இதில் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி நிர்வாகம் உட்பட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



