கர்நாடகாவில் கணவரும் 5 வயது மகனும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் கிடைத்த தடயங்கள் மற்றும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆரம்பத்தில் சந்தேக மரணமாக கருதப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாறியுள்ளதால், அதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குணிகல் தாலுகாவைச் சேர்ந்த அபிநந்தன் (38), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிணிக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு யதுவீர் கவுடா என்ற 5 வயது மகன் இருந்தார். இவர்கள் வடக்கு பெங்களூருவின் சிக்கபானவரா பகுதியில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ஹரிணி போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது கணவரும் மகனும் வீட்டில் அசைவின்றி கிடப்பதாக தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை உறுதி செய்து, உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்திருந்ததால், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ஆரம்பத்திலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வீட்டை ஆய்வு செய்தபோது வராண்டாவில் ரத்தக்கறை போன்ற தடயங்கள் காணப்பட்டதுடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, ஹரிணியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில தகவல்கள் போலீசாரின் கவனத்துக்கு வந்தன. அவருக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும், சில மாதங்கள் அந்த நபருடன் தனியாக வசித்து வந்ததாகவும் அபிநந்தனின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், அபிநந்தனுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாக ஹரிணியின் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் வெவ்வேறு தகவல்களை அளித்ததால், போலீசார் ஹரிணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அபிநந்தன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரது முகத்தை தலையணையால் அழுத்தியதாகவும், இந்த சம்பவத்தை 5 வயது மகன் பார்த்துவிட்டதால் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தையையும் கொலை செய்ததாகவும் ஹரிணி தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து எதுவும் தெரியாதது போல் போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் அபிநந்தனின் காதுகளில் ரத்தக்கசிவு இருந்தது உள்ளிட்ட சில தடயங்கள் போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மரணத்திற்கான மருத்துவ காரணங்கள் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணியை உறுதி செய்ய பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ஹரிணியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஆண் நண்பர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவரா, இரு கொலைகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது சம்பவத்துக்குப் பிறகு அவர் தப்பிச் சென்றாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் மற்றும் 5 வயது குழந்தையின் உயிரிழப்பைச் சுற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கிடைக்கும் தடயங்கள், பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கின் முழு பின்னணியும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



