தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்படுகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி இருக்கும்வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. திமுகவை சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற பெண் தலைவர் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருடுகிறார். ஊராட்சி மன்ற தலைவராக திருட்டு வழக்கில் ஈடுபடுவரை திமுக தேர்ந்தெடுக்கிறது. இந்த கட்சியின் யோக்கியதை என்ன என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்து 52 மாத காலம் நிறைவடைந்துவிட்டது. ஆத்தூர் தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டம் கூட கொண்டுவரவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்தஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 350 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைத்த அரசு அதிமுக அரசு.
இது போன்று ஒரு பெரியத் திட்டத்தையாவது இங்குள்ள அமைச்சர் கொண்டுவந்திருக்கிறாரா..,? சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என அதிமுக மத்திய அரசிடம் கோரிக்கைவைப்போம். அதை நிறைவேற்ற அதிமுக முயற்சி எடுக்கும். பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.