தேர்தல் வியூக நிபுணரை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்தால், வரும் காலத்தில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் ஆட்சியாளர்களை கண்டிக்கும் விதமாக தனக்குத்தானே சாட்டையடி கொடுத்து, திமுகவை ஆட்சியில் இருந்து வீட்டு முறை செருப்பு அணிய மாட்டேன் எனக் கூறி அண்ணாமலை விரதம் இருந்தார். அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்துவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பழநி ஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்த பின், முருகன் கோவிலுக்கு படிபாதை வழியாக நேற்று காவடியுடன் சென்றார். பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்ற போது, அவரை போலீசார் தடுத்தனர். பின்னர் போலீசார் அனுமதித்தனர். படிப்பாதையில் சென்ற அவரை, முருக பக்தர்கள் வரவேற்று கைகுலுக்கினர்.
வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஆளும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை முன்வைத்தார். நடிகர் விஜய்யின் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறோம்.
மக்களை சந்தித்தால் அவர்கள் பிரச்சனையைச் சொல்வார்கள். அதுதான் அரசியல். ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் வியூக நிபுணர்களை உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்பது என்ன அரசியல்..? மக்களை சந்தியுங்கள், தெருவில் நில்லுங்கள், மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் வியூகவாதிகள் தான். மக்களைச் சந்திக்காமல் ஒவ்வொரு தலைவரும் தேர்தல் வியூக நிபுணரை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்தால், வரும் காலத்தில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். எல்லோரும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்து விட முடியுமா என கேள்வி எழுப்பினார்.