மதுபானம் பங்கீடு செய்வதில், ஏற்பட்ட தகராறில், பிளேடால் கழுத்தை அறுத்து, 60 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் பகுதியில், பிச்சை எடுத்து வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும், செட்டிகுளம் பகுதியில் சேர்ந்த உதயா (18) என்ற வாலிபரும் ஒன்றாக இணைந்து, மது அருந்துவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், காமாட்சி அம்மன் கோவில் மேற்கு மாட வீதி அருகே இருக்கின்ற ஒரு சந்தில், இருவரும் இணைந்து, மதுவை குடித்துள்ளனர். ஆனால், இந்த மதுவை குடித்த பின்னரும், போதை ஏறாததால், மற்றொரு மதுபாட்டில் வாங்குவதற்கு இருவரும் சேர்ந்து, பணத்தைப் போட்டு, மறுபடியும் ஒரு மது பாட்டிலை வாங்கி இருக்கிறார்கள். இதில் பிச்சைக்காரர் மது பாட்டில் வாங்கி வந்து, சைட் டிஷ் வாங்குவதற்காக சென்ற உதயாவிற்காக வெகு நேரம் காத்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், உதயா வருவதற்கு தாமதமானதன் காரணமாக, அந்த பிச்சைக்காரர் முழு மது பாட்டிலையும் காலி செய்து விட்டார்.
பின்னர் அங்கு வந்த உதயா, முழு மது பாட்டிலையும் காலி செய்த முதியவர் மீது கோபம் கொண்டு, மீண்டும் கடைக்கு சென்று, இரண்டு பிளேடுகளை வாங்கி வந்துள்ளார். பின்னர் பிச்சைக்காரரின் கழுத்தை அந்த புது பிளேடால் அறுத்து இருக்கிறார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். முதியவரை கொலை செய்துவிட்டு, உதயா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள், அந்த முதியவரின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு நடுவே கைகள் மற்றும் ஆடைகளில் ரத்த கரையுடன், சுற்றித்திரிந்த உதயாவை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.
ஆனால் உயிரிழந்தவர் யார்? அவருடைய சொந்த ஊர் என்ன? மற்றும் அவருடைய பெயர் தொடர்பான விபரங்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.