திண்டுக்கல் மாவட்டத்தில், பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாமனாரிடம் வரதட்சணையாக பைக் வாங்க சென்ற இடத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் பாண்டியன் தனது மாமனாரிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டதாகத் தெரிகிறது. இதற்காக மனைவியையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மாமனாரிடம் பைக் வாங்கித் தர கேட்பதற்காக கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு பேருந்தில் சென்று இருக்கிறார்.
அப்போது மது போதையில் இருந்த பாண்டியன் ” நான் உன் தந்தையிடம் பைக் கேட்க மாட்டேன், நீதான் எனக்கு கேட்டு வாங்கி தர வேண்டும்” என்று மனைவியிடம் கூறியுள்ளார். மேலும் தனது மாமனார் பேருந்து நிலையத்திற்கு வந்து பைக்கை தர வேண்டும் எனவும் மனைவியிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே பேருந்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாண்டியன் தனது கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கர்ப்பிணிப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வரதட்சணை விவகாரத்தில் கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.