கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்பதை திருமாவளவன் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தமிழக நலனுக்காக சந்தித்ததாக அவர் கூறினாலும், கூட்டணி பேச்சுதான் என்பதை பாஜக தரப்பு உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என அமித் ஷா அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். ஏற்கெனவே, நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேஏயு.அசனா விலகியது குறிப்பிடத்தக்கது.