பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முடிவினை சந்திரபாபு நாயுடு கைவிட வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.
பன்மாநில நதிகளில் ஒன்றாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாநில உரிமை, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் தலைவர்களில் ஒருவரான திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள், பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.