கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக தடை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும். பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும், அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்ரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டி, கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன்.
தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு தி.மு.க அரசு உதவுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 2001-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த ஒட்டுமொத்த கேபிள் இணைப்புகளில் 80 சதவிகிதம் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடம் சென்றது. 2001-2006 காலகட்டத்தில் மீண்டும் ஹாத்வே 60 சதவிகித இணைப்புகள் பெற்று முன்னுக்கு வந்தது. 2006-2008 காலகட்டத்தில் கோபாலபுர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கிக் கிடந்தது.
2008-க்கு பிறகு மீண்டும் தலைதூக்கிய சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு தி.மு.க அரசு உதவியதால் ஹாத்வே நிறுவனம் 2010-ல் தமிழகத்தில் இனியும் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒட்டுமொத்த வணிக செயல்பாடுகளை நிறுத்திவிட்டது. தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் போன்ற, தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களைப் பலிகொடுத்த தி.மு.க இப்போது அரசு நிறுவனத்தைப் பலிகொடுக்க நினைக்கிறது. திறனற்ற தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத போக்கை தமிழக பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என தெரிவித்துள்ளார்.