இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் ஜி.20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல் முறையாக இந்தியா தலைமை தாங்குகிறது. இது உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளது.
டெல்லியில், பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற பாரத் மண்டபத்தில் பதினெட்டாவது ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, துணை ராணுவ படை, ராணுவப்படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் என்று, மொத்த டெல்லியும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. அத்துடன் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது.
பல முக்கிய முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருகை தந்துள்ள நிலையில், டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என சுமார் 1.30 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த டெல்லியும், பரபரப்பாகவும் உஷாரான நிலையிலும் இருக்கின்ற சூழ்நிலையில் ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் பாரத் மண்டபத்திற்கு, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் போன்றவற்றை ஏற்றி சென்றதாக, ஒரு ஆட்டோவின் படத்துடன் x சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவிட்டிருக்கிறார். இதன் காரணமாக, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அத்துடன், அந்த பகுதிக்கு வந்த ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மிக தீவிரமாக காவல்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும் அந்த தகவலை பதிவிட்டவர் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த தகவலை பதிவிட்டவர் வடக்கு டெல்லியில் இருக்கின்ற பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சேர்ந்த குர்திக் ஷா (21) என தெரிய வந்தது. மேலும், சமூக வலைதளத்தில், பதிவிட்ட ஆட்டோ எஸ்.எஸ்.என் பூங்கா பகுதியில் வசிக்கும் குர்மித் சிங் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. ஆட்டோ ஓட்டுநர் ஹர்சரன் சிங் என்பவரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் சாந்தினி சவுக் என்பவருக்கு துணிகளை கொண்டு செல்வதற்கு அந்த ஆட்டோ பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டிற்கு அருகே வசிக்கும் தன்னுடைய சகோதரர் குல்திப்ஷாவிற்கும் தனக்கும் ஆட்டோ நிறுத்துவது குறித்து, தொடர்ந்து, தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறியுள்ளார் ஹர்ஷரன் சிங்.
இதனால், அந்த ஆட்டோவை புகைப்படம் எடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் விதத்தில், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அதேநேரம், அந்த ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் சந்தேகத்திற்கு இடமான எந்த விதமான பொருளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜி.20 மாநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவலை வெளியிட்டதாக தெரிவித்து குல்தீப் ஷா மீது, வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
.
.
.