தேர்தல் பத்திரத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நிறுவனங்களிடம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திலக் நகர் போலீஸார் சனிக்கிழமை முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்ததாக விமர்சனம் எழுந்தது.
2018 முதல் 2024 ஜனவரி மாதம் வரை ரூ.16,518 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனையானதாகவும்,இதில் பெரும்பான்மை நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி அமலாக்கத்துறை , சிபிஐ மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் தொழிலதிபர்களை மிரட்டியதாக கர்நாடகாவை சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் என்பவர் திலக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய திலக் நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 34 (பொது நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்கள்) 384 (பணம் பறிப்பதற்காக தண்டனை) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.