தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.
முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு தன்னுடைய பெற்ற தந்தையாலேயே கொடுமை நடைபெறும் கொடுமை எல்லாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, தற்போது பள்ளியில் படிக்கும் சக மாணவர்களே ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதைவிட கொடுமை என்னவென்றால், இது பற்றி வகுப்பாசிரியரிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாதது தான்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அதே பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் சில மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து, தன்னுடைய வகுப்பு ஆசிரியரிடம் அந்த மாணவி புகார் அளித்தும், அவர், பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து, இரண்டு முறை அந்த மாணவி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதன் பிறகு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அந்த மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, மாணவி தனக்கு நடந்த கொடுமை அனைத்தையும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆகவே அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பரிசோதனை செய்தபோது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு, இது பற்றி, அந்த மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்தனர்
அதன் பிறகு, சிறார் நீதிமன்றத்தில், ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும், சிறுவர்கள் என்பதால், அவர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்த விவகாரம் குறித்து, பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.