தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிகவும் பரபரப்பானது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை நிராகரித்து வெளிநடப்பு செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை முன் வைத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில் தமிழக ஆளுநர் ரவி அரசின் உரையை புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து அந்த உரையை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். உரை வாசிக்கப்பட்டு கொண்டிருக்கும்போதே திடீரென சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இதனால் அவை உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநரின் இந்த செயலை பலரும் அநாகரிகமானது என கண்டித்துள்ளனர்.
இது தொடர்பாக பேட்டி அளித்த காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை ” ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குறை கூறியதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தான் தேசிய கீதம் பாடப்படுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் மரபு. இந்த மரபு கூட ஆளுநருக்கு தெரியவில்லை. ஆளுநர் மரபு மீறி நடந்தாலும் அவரை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார்” என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு தயாரித்த உரையில் தனக்கு உடன்பாடில்லை என்றால் ஒப்புதல் பெறும்போதே ஆளுநர் அதனை மறுத்திருக்கலாம். அப்போது சம்மதம் என்று சொல்லிவிட்டு சட்டசபையில் அந்த உரையை புறக்கணிப்பது சரியான நடைமுறை இல்லை. சபாநாயகர் உரையை வாசித்ததும் இரண்டு நிமிடங்களில் தேசிய கீதம் ஒலித்த பிறகு ஆளுநர் அவையில் இருந்து வெளியேறி இருக்கலாம் . ஆனால் அவர் எந்த மாண்பையும் கடைப்பிடிக்காமல் வெளிநடப்பு செய்தார். மேலும் ஆளுநர் சட்டசபையில் நடந்து கொண்ட விதம் ஜனநாயக முறைக்கு எதிரானது. இதனை அனைவரும் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.