காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் கட்சி இதுவரையில் என்ன செய்தது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம், இரண்டாவது நாளாக தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று காலை 11 மணி அளவில் வழக்கம் போல மக்களவை ஆரம்பமானது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த விவாதத்தில், இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, அவர் உரையாற்றும் போது, மத்திய அரசு மீதான கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். மேலும் அவர், நான் சென்ற முறை அதானி பற்றி பேசியது உங்களை காயப்படுத்தி இருக்கலாம். அதன் காரணமாக தான், உங்களுடைய மூத்த தலைவர் வேதனைப்பட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும், நான் சென்ற சில தினங்களுக்கு முன்னர் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றேன். ஆனால், நம்முடைய பிரதமர் இன்று வரையில் அங்கு செல்லவில்லை. ஏனென்றால், அவருக்கு மணிப்பூர் இந்தியா இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிரித்து விட்டீர்கள். மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து உடைத்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார். பாஜகவின் அரசியல் என்பது, மணிப்பூரை கொல்லவில்லை இந்தியாவை கொன்றுவிட்டது என்று கூறிய அவர், மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலமாக, நீங்கள் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள் என்று பேசினார்.
நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேச துரோகிகள், நீங்கள் பாரதமாதாவின் பாதுகாவலர்கள் அல்ல என்று தன்னுடைய உரையில் பல்வேறு விமர்சனங்களை பாஜகவை பற்றி முன் வைத்திருந்தார் ராகுல் காந்தி.
அவருடைய இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, மிக மோசமான பேச்சை நாம் தற்போது கேட்டிருக்கிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஊழல் வாரிசு, ஊழல் அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, நீங்கள் இந்தியா அல்ல, இந்தியாவில் ஊழலை அறிமுகப்படுத்தியவர்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பற்றி யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சி காஷ்மீர் பண்டிட்.களுக்காக இதுவரையில் என்ன செய்திருக்கிறது? என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி உள்ளார்.