கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது..

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ” கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அரசு கடுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
கொரோனாவை நுண்ணிய அளவில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) ஆராய்ந்து, விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. இதன் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதிசெய்துகொள்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.. குறிப்பாக கொரோனா பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..