கடலூர் அருகே பெற்ற மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு( 69) இவர் ஒரு சைக்கிள் கடையை நடத்தி வருகிறார் இவருக்கு, புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் உள்ளிட்ட மூன்று மகன்கள் இருக்கிறார்கள். ராமு தன்னுடைய மனைவியுடன் புருஷோத்தமன் வீட்டில் வசித்து வருகிறார். ராமுவின் மூத்தமகன் புருஷோத்தமன், திமுக ஒன்றிய பிரதிநிதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சென்ற மாதம் 24 ஆம் தேதி இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டு இருந்த ராமு, மறுநாள் காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்துள்ளார்.
காலையில் அவர் மர்மமான முறையில், உயிரிழந்த நிலையில், இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதோடு,உயிரிழந்த ராமுவின் குடும்பத்தினரின் செல்போன் எண்களையும், காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த கண்காணிப்பில், ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது. அதாவது, ராமுவின் மகன் புருஷோத்தமன் (45) என்பவர் தான் தந்தையை கொலை செய்தார் என்ற விவரத்தை, புருஷோத்தமன் தன்னுடைய மனைவியுடன் பேசிய ஆடியோ உரையாடலை வைத்து, காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில், நிலப்பிரச்சனையின் காரணமாக, அடிக்கடி தகராறு செய்து வந்ததால், தன்னுடைய தந்தையை உருட்டு கட்டையால், அடித்து கொலை செய்ததாக புருஷோத்தமன் ஒப்புக்கொண்டார்.
ஆனால், தந்தையை வேறு யாரோ கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில், அவர் புகார் கொடுத்து, நாடகம் ஆடி வந்ததும், எதுவுமே தெரியாதது போல இருந்ததும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.