2025 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை மற்றும் அலை உருவாகும் வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் பயணிகள் நலன், ஆரோக்கியம் மற்றும் வசதிக்காக பின் வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வேலை நடைபெறும் இடங்களில், அதாவது பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளர் அறைகள், உணவகம். ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களும் எளிதாக அணுகக் கூடிய இடங்களில் இவை இருக்க வேண்டும். குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த, போக்குவரத்துக் கழகங்களின் RO தண்ணீர் இயந்திரங்களை முறையான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வதன் மூலம் சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் குறைந்தபட்சம் ஒரு முறை நீர் அருந்த வேண்டும். அனைத்து ஓட்டுநர்கள். நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ORS பொட்டலங்களை வழங்கி, அருந்துவதன் மூலம். கடுமையான வெப்ப நிலையில் உடலில் நீர்சத்து குறையாமல் பூர்த்தி செய்ய உதவ வேண்டும். பணி நேரங்களில் குறைந்தபட்சம் ஒரு பொட்டலத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பணியாளர்கள், குறிப்பாக நேரடி வெப்பத்திற்கு வெளிப்படுகின்ற நேரங்களில், தலையை பாதுகாக்க தொப்பி அணிய வேண்டும்.
வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளான மயக்கம், தலைவலி, அதிகமான வியர்வை போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மேலாளரிடம் தகவல் தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிமனை, இதர வேலைப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வெப்பத்தால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் பொருட்கள் கொண்ட முதல் உதவி பெட்டிகள் வைக்க வேண்டும். பணியாளர்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் பயிற்சி பெற வேண்டும். பேருந்துகளில் உள்ள ஏர்கண்டிஷன் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளுக்குள் காற்றோட்டம் சீராக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
பேருந்துகளின் குளிரூட்டும் அமைப்புகளை சரி பார்த்தல் ரேடியேட்டர்கள் மற்றும் குளிரூட்டும் திரவத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஓட்டுநர்கள் log புத்தகங்களில் ஏதேனும் ஓவர்ஹீட்டிங் (Overheating) பிரச்சினைகளை பதிவு செய்ய வேண்டும். அவற்றுக்கு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த விசிறிகளை, ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் சரி செய்ய வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் இடங்களில் வசதியாக இருக்க போதிய காற்றோட்டம் மற்றும் ஒளியுடன் பராமரிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்க்க, கடுமையான வெப்ப நேரங்களில் போதிய ஓய்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.