மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் அந்த விழாவை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் ஓட்டு போட வேண்டாம் என எச். ராஜா தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சைக்குரிய வகையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலின் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை குடமுழுக்கு விழா ஆகியவை அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் 3000 விஐபிகள் உட்பட சாமியார்கள் மடாதிபதிகள் என நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல கட்சிகளுக்கும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராமர் கோவில் திறப்பு விழாவில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்து மதம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிறுபான்மை ஓட்டுக்கள் பற்றி மட்டுமே கவலை. ராமஜென்மபூமிக்கு செல்லாத கட்சிகளுகளுகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் pic.twitter.com/bMueWBN41L
— H Raja (@HRajaBJP) December 24, 2023
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் தமிழக பாஜகவை சேர்ந்த எச் ராஜா ராமர் கோவிலை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கு யாரும் வாக்களிக்க கூடாது. அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள். இந்து மதம் மற்றும் இந்துக்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிறுபான்மையினரின் வாக்குகள் தான் இவர்களுக்கு முக்கியம் என பதிவிட்டு இருக்கிறார். இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.