திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி எங்கே என் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி உள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? “உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே.. அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசே…தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் ;
நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60%, இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ₹200 விலை குறைக்கப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ₹100 விலை குறைப்பு செய்யப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ₹803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹503 ஆகவே இருந்து வருகிறது.
உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.