மகாராஷ்டிரா மாநிலத்தில் காலையில் மனைவியை கொலை செய்து விட்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் பணிக்கு சென்று வந்த நபரால் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நலசோபரா என்ற பகுதியைச் சார்ந்தவர் பிரபு விஸ்வகர்மா. இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அனிதாவின் நடவடிக்கைகளின் மீது பிரபுவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று காலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து கைக்கலப்பில் சென்று முடிந்திருக்கிறது. அப்போது ஆத்திரத்தில் எல்லை மீறிய பிரபு தனது மனைவி அனிதாவின் முகத்தை மூடி அவரது கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். பின்னர் அவரது உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு எதுவும் நடக்காதது போல் வழக்கமாக பணிக்கு சென்று விட்டார். பணி முடிந்து மாலையில் காவல் நிலையம் சென்று சரணடைத்திருக்கிறார் பிரபு. இது தொடர்பாக காவல்துறையினர் விளக்கத்தை கேட்க என் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து விட்டேன் என கூலாக கூறியிருக்கிறார் பிரபு. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று கொலை செய்யப்பட்ட அவரது மனைவி அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபுவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.