உத்திரபிரதேசம் மாநிலத்தில், ரயில் நிலையம் ஒன்றில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 8 மாத பெண் குழந்தையை, அவருடைய தாயின் கையில் இருந்து பறித்து, தரையில் கொடூரமாக அடித்து, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் இருக்கின்ற ஹார்தோய் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வைஷாலி என்ற பெண், தன்னுடைய 8 மாத கைக்குழந்தையான ப்ரீத்தியுடன், தொடர்வண்டிக்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு மர்மநபர், திடீரென்று, வைஷாலி கையில் இருந்த குழந்தையை பிடுங்கி, தரையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த குழந்தையை பார்த்து, வைஷாலி கதறி அழுதார். அவருடைய அழுகுரலை கேட்டு, அங்கு வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர், குழந்தையை அடித்து, கொலை செய்த அசோக்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம், அந்த ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.