கன்னியாகுமரி அருகே, கணவன் மனைவிக்குள் எழுந்த தகராறு காரணமாக, இரண்டு பச்சிளம் குழந்தைகளை தீ வைத்து எரித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்.
அதாவது, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அடுத்துள்ள, புத்தன் வீட்டு விளையை சேர்ந்தவர் இயேசுதாஸ்(45). இவர் சென்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி, ஷீபா(40). இந்த தம்பதிகளுக்கு, கெபின்(15), கிஷான்(7) என்ற இரண்டு ஊனமுற்ற குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த குழந்தைகளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு பகுதிகளில் அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியும் இவர்களின் ஊனம் சரியாகவில்லை. இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், கடந்த 28ஆம் தேதி இரவு மறுபடியும், இந்த விவகாரம் குறித்து, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் சற்று நேரம் சென்ற பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். ஆனால், மனைவி கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டு, திறக்கவில்லை.
இப்படியான சூழ்நிலையில் தான், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென்று அந்த வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது, இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில், ஏசுதாஸின் மனைவி, குழந்தைகள் என மூன்று பேரும், தீயில் கருகிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து, மூவரையும் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மூன்று பேரும், அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.