தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறலை தடுப்பதற்கு என்னதான் வழி என்று அதிகாரத்தில் இல்லாத பாமர மக்கள் சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரத்தில் இருக்கும் யாரும் அது பற்றி சிந்திப்பதில்லை.அப்படி அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு நபருக்கு 15 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல திருவேற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (42) இவர் சென்ற 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. இது குறித்து அப்போதைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த நிலையில் தான் இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர் கே பி தமிழரசி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் சிங்காரவேலன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, அவருக்கு 15 வருட கால சிறை தண்டனை மற்றும் 15000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார்.அதே நேரம் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார்.