ஒருவர் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு வறுமையை சந்தித்தாலும் தான் பெற்ற குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.சாதாரண பிச்சை எடுப்பவர்கள் கூட, தாங்கள் பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை. தங்களுடைய குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் வறுமையின் காரணமாக, 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்த தாய், பாட்டி மற்றும் குழந்தை விற்பனை செய்யும் புரோக்கர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணர். இவருடைய மனைவி மாரீஸ்வரி இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கின்ற சூழ்நிலையில், சென்ற 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கலைவாணரும், மாரீஸ்வரியும், அடிக்கடி சண்டை இட்டு கொண்டுள்ளனர். இதன் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மாரீஸ்வரி தன்னுடைய 5 மாத பெண் குழந்தையுடன் தன்னுடைய தாய் அய்யம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் குழந்தை விற்பனை செய்யும் வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த சூரம்மாள் மற்றும் குழந்தை புரோக்கர் தூத்துக்குடி பி என் டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்டோர் வறுமையில் இருந்த மாரீஸ்வரியும், அவருடைய தாய் அய்யம்பாளையும் சந்தித்துள்ளனர்.
குழந்தை விற்பனை செய்யும் புரோக்கர்கள் இருவரும் 5 மாத பெண் குழந்தையின் தாயான மாரீஸ்வரி மற்றும் அவருடைய தாய் அய்யம்மாளிடம் குழந்தையை விற்பனை செய்தால் 50 ஆயிரம் ரூபாய் தருவேன் என்று தெரிவித்து அவர்களை குழந்தையை விற்க சம்மதம் தெரிவிக்க வைத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து நேற்று குழந்தையை விற்பனை செய்வதற்காக தூத்துக்குடி, பாளையங்கோட்டை ரோட்டில் இருக்கின்ற இசக்கியம்மன் ஆலயத்தின் அருகே மாரீஸ்வரி மற்றும் அவருடைய தாய் அய்யம்மாள் உள்ளிட்டோர் 5 மாத பெண் குழந்தையுடன் காத்திருந்தார்கள்.
இது தொடர்பான தகவல் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, குழந்தை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆகவே தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததின் பேரில் வறுமை காரணமாக, 5 மாத பெண் குழந்தையை 50000 ரூபாய்க்கு விற்பனை செய்யவிருந்த குழந்தையின் தாய் மாரீஸ்வரி மற்றும் அவருடைய பாட்டி அய்யம்மாள் மற்றும் குழந்தை விற்பனை புரோக்கர்கள் சூரம்மாள், மாரியப்பன் உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை அரசு குழந்தைகள் இல்ல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 50000 பணத்திற்காக 5 மாத பெண் குழந்தையை பெற்ற தாயும், பாட்டியும் விற்பனை செய்ய முயற்சி செய்தது தூத்துக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.