பல்லாரி டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகிரெட்டி. இவரது மகன்கள் ஹரீஷ் ரெட்டி மற்றும் ரகுராம ரெட்டி. இதில் இளையமகன் ரகுராம ரெட்டி ஆவார். இந்த நிலையில் ரகுராம ரெட்டிக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டரான மவுனிகா என்பவருக்கும் கடந்த 2019-ஆம் வருடம் கல்யாணம் நடந்தது. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த கல்யாணம் ஆகும்.
இந்நிலையில் ரகுராமரெட்டி மருத்துவர் என்றும், அவர் பல்லாரியில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருவதாகவும் மவுனிகாவிடமும், அவரது பெற்றோரிடமும் சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பிய மவுனிகாவின் பெற்றோர் ரகுராம ரெட்டிக்கு மவுனிகாவை கல்யாணம் செய்து வைத்தனர். அவர் கேட்ட 50 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர். கல்யானத்திற்கு பிறகு தான் ரகுராம ரெட்டி மருத்துவர் இல்லை என்பதும், அவர் வேலை ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததும் மவுனிகாவுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரகுராம ரெட்டியிடம் கேட்டபோது பிரச்சினை உண்டானது. அப்போது அவர் மவுனிக்காவிடம் தான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர் என்றும், கல்யாணத்திற்காக மருத்துவர் என பொய் சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார். இதற்கிடையே ரகுராமரெட்டி மேலும் வரதட்சணை கேட்டு மவுனிகாவை கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதை தொடர்ந்து மவுனிகா, கணவர் வீட்டில் இருந்து ஐதராபாத்தில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரகுராம ரெட்டி இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மவுனிகாவும், அவரது குடும்பத்தினரும் ரகுராம ரெட்டியின் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டனர். அப்போது அவர்களை ரகுராம ரெட்டி, அவரது தந்தை நாகி ரெட்டி, சகோதரர் ஹரீஷ் ரெட்டி மற்றும் குடும்பத்திலுள்ளவர்கள் சேர்ந்து அடித்து, விரட்டியுள்ளனர். எனவே மவுனிகா இதுகுறித்து பல்லாரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரகுராமரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரகுராம ரெட்டி, ஹரீஷ் ரெட்டி மற்றும் நாகி ரெட்டி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.